“பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு தேர்தல் ஜுரம்”- எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மன்னார்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது. அவர் பூரண நலம் பெற்று, திரும்பி வர என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் வேண்டுகிறேன். இன்றைக்கு மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. அரசு அதிகாரிகள் துணை இல்லாமல், மணல் கொள்ளைகள் நடக்காது. கரூரில் மணல் மாஃபியாக்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதை தட்டிக் கேட்டவரை, வெட்டி கொலை செய்கிறார்கள். இதுவரை அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று போதைப்பொருள் விற்பனை அதிகமாகிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையால், சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. திருவள்ளூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை?
மக்களை சந்திப்பது தவறா? நான் மக்களை சந்திக்கிறேன். திருமாவளவன் அவர்கள் ஒரே நாளில் படித்து, அன்றே தேர்வு எழுதுபவராம். மக்களை சந்திப்பது தவறு என்று சொல்லக்கூடிய கட்சியாகிவிட்டது விசிக. தொகுதிக்கு போனால் தானே மக்கள் பிரச்சனை தெரியும்? ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக சென்று திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்கள். அதற்கு மக்களிடம் OTP பெறுகிறார்கள். இன்றைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதற்கு தடையாணை பிறப்பித்துள்ளது. திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் வல்லவர் ஸ்டாலின். திட்டங்களுக்கு பெயர் வைப்பார், அதற்கு ஒரு குழு போடுவார். இதுவரை 52 குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுக்களின் நிலையை வெள்ளை அறிக்கையாக கேட்டால், தர மறுக்கிறார்கள். இன்றைக்கு இண்டி கூட்டணியில் உள்ள திமுக, கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி மேதாட்டு அணையை கட்டக்கூடாது என்று பேச்சுவார்த்தை நடத்தலாம். ஏன் இதுவரை இதுபற்றி இவர்கள் பேசவில்லை? மேகதாட்டு அணை கட்டப்பட்டால், டெல்டா முழுமையாக பாலைவனமாகும். அதிமுக ஆட்சியில் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் அமலாகும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக கூறிவிட்டு, எதையும் செய்யவில்லை. அதிக முறைகேடுகள் நடந்ததால் நிதியை மத்திய அரசு நிறுத்தியபோது, நாங்கள் பேசி நிதியை வாங்கி தந்தோம். திமுக ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில், சபரீசனும், உதயநிதியும் 30,000 கோடி கொள்ளையடித்துவிட்டு, அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக கூறுகிறார். இதை இதுவரை ஸ்டாலின் மறுக்கவே இல்லையே? திமுக ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி தான். கருணாநிதி காலம் முதல் ஊழல் தொடர்கிறது. வீராணம் ஏரி ஊழல், பூச்சிமருந்து ஊழல் என்று ஊழல் ஊழல் என்று ஊழல் மட்டுமே செய்கிறார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். இன்று டாஸ்மாக்கிலும் ஊழல்.
என் வீட்டில் ரெய்டு நடந்ததால், நான் பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டேன் என்கிறார் கே.என் நேரு. சமீபத்தில் உங்கள் மகன் வீட்டில், உறவினர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டுகள் நடந்ததை யாரும் மறக்கவில்லை. எங்கள் மடியில் கனமில்லை. 1999ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அவர்களுடன் தானே கூட்டணியில் இருந்தீர்கள்? 2001 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவும் திமுக கூட்டணி வைத்திருந்தது. நீங்க கூட்டணி வைத்தா, பாஜக நல்ல கட்சி. அதுவே நாங்க கூட்டணி வைத்தா, பாஜக மதவாத கட்சியா? அதிமுக இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டது என்று ஸ்டாலினும், திமுகவின் கூட்டணி கட்சியினரும் பேசுகின்றனர். நீங்க ஏன் பதறிட்டு இருக்கீங்க? ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுதாம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது” என்றார்.


