கொரோனா தொற்று உயரும் போது டாஸ்மாக் கடைகள் மூடாமல் இன்னும் இருப்பது கண்டிக்கத்தக்கது!!

 
eps

கொரோனா தொற்று உயரும்போது டாஸ்மாக் கடைகள் மூடாமல் இன்னும் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ,  அம்மா உணவக பணியாளர்கள் குறைக்கப்பட்டு உணவு ,வழங்கப்படும் பொருள்களும் குறைவாக உள்ளது என்று குற்றச்சாட்டை எழுப்பினார். இதற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அம்மா உணவகம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இந்த மழை நேரத்தில் கூட இலவச உணவு அம்மா உணவகங்கள் மூலம் அளிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  அம்மா உணவகத்தை மூடினால் என்ன ?கலைஞர் பெயரில் உள்ள எத்தனை திட்டங்களை மூடி உள்ளீர்கள் நீங்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த எடப்பாடிபழனிசாமி, அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கலைஞர் பெயரிலுள்ள திட்டங்களை மூடியதால் தான் மக்கள் உங்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர் .நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் " என்றார்.  இப்படி காரசாரமாக சட்டப்பேரவையில் விவாதம் சென்று கொண்டிருக்கையில்,  கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் , கூட்டுறவு சங்க அதிகாரிகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டத்திற்கும்  எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

eps


இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "டாஸ்மாக் கடைகளை மூட எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது போராட்டம் நடத்தினார்; தற்போது ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயரும்போது டாஸ்மாக் கடைகள் மூடாமல் இன்னும் இருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளனர்; அம்மா உணவகம் முன்னோடி திட்டமாக உள்ளது, அதை மூடினால் என்ன என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது வேதனை அளிக்கிறது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் தொகுப்பில் 15 பொருட்கள் மட்டுமே உள்ளன. அவையும் தரமற்று உள்ளன என்பதை வீடியோ காண்பித்து எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.