“விஜய்க்கு ஆப்பு அடிக்கப் போவதே ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும்தான்”- இபிஎஸ்
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது என்று தவெகவுக்கு ஆதரவு அளித்த தலைவர்களே தெரிவித்துள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ முதல்வர் விஜய் அவர்களே, உங்களுக்கு ஆப்பு அடிக்கப் போவதே ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும்தான். அதனால் எச்சரிக்கையாக இருங்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுத்த கட்சி பாமக. அந்த கட்சி வலுப்பெற சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனது இந்த கருத்தை பாமகவினர் தவறாக நினைக்க வேண்டாம். இடைத்தேர்தலில் பண பலம்,அதிகார பலத்தை வைத்து தவெக வெற்றி பெற்றுள்ளது. தவெக அரசு திட்டமிட்டு 4 மாதங்களாக மின் கொள்முதல் செய்யவில்லை. செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி உள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குகின்றனர். வெற்றி மெகா ஊழல் என்று சொல்லலாம். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்தார்கள். இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை.
20 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்தது என்றுதான் வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதனை ரத்து செய்தனர். ஆனால், இப்போது 35 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அப்படியென்றால் இவர்கள் 20 ரூபாய்க்கும் குறைவாகதானே வாங்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது மெகா ஊழல் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கல்லா பெட்டி கூட்டணி என விமர்சித்துவிட்டு திமுக கூட்டணி ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஊழல் செய்கிறது தவெக அரசு” என்றார்.

