"எங்கு பார்த்தாலும் ஊழல்... 10,000 ரூபாய் கேட்டவர்கள் 20,000 ரூபாய் கேட்கின்றனர்” - இபிஎஸ்

 
ச்

சினிமாவில் வருவது போல் தமிழக சட்டமன்றம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "டிரம்புக்குப் பதில் விஜய் கூட அமெரிக்க அதிபராகலாம். தவறில்லையே... அவருடைய விருப்பம். இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆகலாம், பிரதமராக ஆகலாம். ரீல்ஸ் போட்டே தான் ஆட்சி நடத்துகிறார்கள். பேரவையை 24 மணி நேரம் கூட அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நடத்துவார். தற்போது 10 மணிநேரம் சட்டப்பேரவையை நடத்துகிறார். இன்னும் சில நாட்களில் 24 மணிநேரம் கூட சட்டப்பேரவையை நடத்துவார். 

எங்குபார்த்தாலும் ஊழல்,ஊழல் என்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஊழல் அதிகமாக இருக்கிறது. 10,000 ரூபாய் கேட்டவர்கள் 20,000 ரூபாய் கேட்பதாக மக்கள் பேசுகிறார்கள். எனது பெயரை சொல்லுங்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார். முதலமைச்சர் பெயரை சொன்னால் சேர்த்து கேட்கிறார்கள், இல்லையென்றால் குறி போட்டு அனுப்பி விடுகிறார்கள். சினிமாவில் சட்டமன்ற காட்சிகள் எப்படி இருக்குமோ, அதேமாதிரிதான் இப்போது இருக்கிற சட்டமன்ற நிகழ்ச்சி இருக்கிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற 110 நாட்களில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. ஆட்சியின் நிர்வாக சீர் கேட்டால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. அப்படி நீடித்தால் ரூ.10 லட்சம் கோடியை கடனாக வாங்குவார்கள்” என்றார்.