“மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” - எடப்பாடி பழனிசாமி
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்கின்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.. இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மேகதாது அணை தொடர்பான தவெக அரசின் தனித்தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது. கர்நாடகா செல்வதை முதலமைச்சர் விஜய் தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை தமிழக முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். கர்நாடக முதலமைச்சருடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. மேகதாது பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் குரலை முதலமைச்சர் விஜய் பொருட்படுத்துவதில்லை. முதலமைச்சர் விஜய் மவுன புரட்சி செய்வதில் வல்லவர். வேளான் பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்கின்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.. இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கர்நாடகாவில் தற்போது 80 டிஎம்சி உள்ள நிலையிலும் தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். மேகதாது அணை கட்டி விட்டால் நமக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத்தந்தோம். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர்மன்றம் தேவையில்லை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டு தமிழகத்திற்கு மாதாந்திர வாரியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. கர்நாடகாவில் தற்போது புதிதாக பொறுப்புள்ள முதலமைச்சர் மேகதாதுவில் அணையை கட்டுவதாக தெரிவித்து வருகிறார்; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். இரண்டு மாநிலத்திற்கிடையே நல்லுறவை பாதிக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நதிநீர் மேலாண்மையின் தீர்ப்பை ஏற்க முடியாது என கர்நாடகா முதல்வர் சொல்வது கண்டிக்கத்தக்கது.” என்றார்.

