கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது- எடப்பாடி பழனிசாமி
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காகவே அஇஅதிமுக போராட்டம் நடத்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான FIR வெளியானது தவறான முன்னுதாரணம். அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காகவே அஇஅதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. யாரை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது. இவ்வளவு பயம் ஏன்?. எங்களை கைது செய்வதற்கு ஆயிரக்கணக்கான போலீசார் வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லையா?
கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்துள்ளார். இது அவர் கொண்டுவந்தது இல்லை. அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம். 2018ல் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக நிதின் கட்கரி இருந்தபோது, டெல்லியில் கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பங்கேற்று, கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி. எனவே விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று மூன்றே நாளில் மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெற்றோம். 2020ல் கொரோனா காலம் என்பதால் இந்த பணி அப்படியே தடைப்பட்டுவிட்டது. ஸ்டாலின் மாடல் அரசாங்கம் டெண்டர் விட்டு இந்த பணியை செய்திருக்கிறார்கள். திட்டத்தை கொண்டுவந்தது அதிமுகதான்” எனக் கூறினார்.