ராமர் கோயிலை கட்டிவிட்டால் அவர்கள் பின்னே மக்கள் போய்விடுவார்களா?- எடப்பாடி பழனிசாமி
கோயிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “கோயிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும், அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம், ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோயிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. இந்திய நாடு பல்வேறு மதங்கள், சாதிகள் கொண்ட அமைப்பு. அவரவர்களுக்கு பிரியப்பட்ட கடவுளை வணங்குகின்றனர். கோயில் கட்டுபவர்கள்பின் மக்கள் அனைவரும் சென்று விடுவார்கள் என்று சொல்ல முடியாது. ராமர் கோயில் கட்டிவிட்டதால் மக்கள் அனைவரும் பாஜகவினர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து.
வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி. அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம். மேற்குவங்க முதல்வர் மம்தா கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வந்துள்ளது. இன்னும் யார் யாரெல்லாம் வெளியே போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை திமுக இளைஞரணி மாநாட்டில் தெரிவித்துவிட்டனர். சீட்டு ஆடுவது, மது அருந்துவது, தூங்குவது... திமுகவால் இளைஞரணி மாநாட்டை நினைத்தபடி நடத்த முடியாமல் இருக்கைகள் நிரப்புவதற்கு கூட ஆள் இல்லாமல் காலியாக இருந்தன, அதிமுக ஏற்பாடு செய்த மாநாட்டில் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு பேருந்துகள் வாங்குவதற்காக ஜெர்மன் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆட்சியில் போக்குவரத்து மானிய கோரிக்கைகள் 5,000 பேருந்து புதிதாக வாங்கப்படும் என்று மூன்று ஆண்டுகளாக திருப்பி திருப்பி சொல்லி வருகின்றனர். இதுவரை பேருந்துகள் வாங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டது. குறிப்பிட்ட காலம் வரை தான் பேருந்துகள் இயக்கப்படும். அவையெல்லாம் கூடுதல் ஆண்டுகள் இயக்குவதற்கு திமுக ஆட்சியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஆங்காங்கே பேருந்துகள் பழுதாகி இயங்காமல் நிறுத்தப்பட்டு வருகிறது. திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சியில் எந்த நிர்வாகமும் சரி இல்லை. திமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை உரிமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள், இதுவரை எதுவுமே நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. அனைத்து மதங்களுக்கும் சமமாக செயல்பட்டோம். திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணியமர்த்தப்பட்டு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகள் சம்பந்தப்பட்டதே காரணம். இதற்கு எதிராக 1.2.24 அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரப்பட்டு திறந்து விட்டனர். முழுமையான பணிகள் முடிந்த பின்னரே திருத்திருக்க வேண்டும். அவசரத்தில் திறந்ததால் தான் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துகள் மாநாட்டுக்கு வெளியே சிதறிக்கிடந்தன. வரும் 2024ம் நாடாளுமன்றத்தில் அதிமுக சரியான கூட்டணியை அமைக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது” என்றார்.