அதிமுக அனைத்து மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்ப்பட்ட கட்சி- எடப்பாடி பழனிசாமி

 
eps

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த திமுக, சனாதனத்தை எதிர்ப்பதாக கூறுகிறது. அதிமுக எப்போதும், அனைத்து மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்ப்பட்ட கட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சனாதன ஒழிப்பு என்கிற கோஷத்தை உதயநிதி எழுப்பியிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என மக்களை இவர்கள் வாட்டி வதைக்கிறார்கள். இதை திசை திருப்ப, இப்படி கருத்து தெரிவித்துள்ளார். சனாதனம் பற்றி பேச திமுகவுக்கு அருகதையில்லை. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்ட போது, எதிர்த்து வாக்களித்தது திமுக. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை எதிர்த்து வாக்களித்தார்கள். இப்போது திரௌபதி முர்மு அவர்களை எதிர்த்தும் வாக்களித்தார்கள். 

இப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை எதிர்த்து வாக்களித்தவர்கள், சனாதன எதிர்ப்பை பற்றி பேசுகிறார்கள். திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ் பாரதியும், திமுக ஆட்சியின் போது கருணாநிதியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நீதிபதியானது தாங்கள் போட்ட பிச்சை என்றார். அதற்கு பின், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபால் அவர்களை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அவரை தாக்கி, அவர் மேஜையை உடைத்து, அவர் மைக்கை உடைத்து, சட்டையை கிழித்து அராஜகம் செய்தது திமுக. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவரை இழிவுப்படுத்தியது திமுக. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவரை பற்றி விவாதத்தில் பல விமர்சனங்களை வைத்தது திமுக. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த கட்சி திமுக. இவர்கள் சனாதன எதிர்ப்பை பற்றி பேசுகிறார்கள். 

அதிமுகவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அதன் பிறகும் சரி, இது மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்ப்பட்ட கட்சி. தமிழகம் இன்று குட்டிச்சுவராகியுள்ளது. எல்லாம் துறைகளில் ஊழல் நடந்துள்ளது. பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தினமும் கொலைகள் நடக்கின்றன. செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் மறைக்கவும், திசை திருப்பவும், சனாதன பிரச்சனையை திமுக கையிலெடுத்துள்ளது. பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களை எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளார்கள். உரிய உதவிகளை அவர்களுக்கு செய்துள்ளோம், போராட்டம் நடத்தியுள்ளார்கள். உதயநிதி என்ன சாதனை செய்துவிட்டார்? கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பது தான் அவரது தகுதி. இதை வைத்து தமிழகத்தை ஆட்டிப்படைக்க நினைக்கிறார்கள். இது மன்னராட்சி இல்லை, ஜனநாயக நாடு. 

உதயநிதிக்கு பிறகு இன்பநிதி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர்களே சொல்லும் அளவுக்கு கார்ப்பரேட் கம்பெனி போல திமுக செயல்பட்டு வருகிறது. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்படும். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அதற்கு முடிவுக்கட்டுவார்கள். என்னை மிசாவில் போட்டார்கள், எமர்ஜென்சியை அமல்படுத்தினார்கள் என்று சொன்ன திமுக, இன்று அதே காங்கிரஸ் உடன் தானே கூட்டணி வைத்துள்ளது? ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை திமுக ஏன் எதிர்க்கிறது. சிறந்த முதல்வர், நாட்டின் முதன்மையான முதல்வர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின், ஏன் மக்களை சந்திக்க பயப்படுகிறார்? ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்தார்? இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய முதல் மாநிலம் தமிழகம் என்பது தான் அவர் செய்த ஒரே சாதனை. 2.75 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள், என்ன திட்டம் கொண்டுவந்தார்கள்? திறமையில்லாத ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி செய்து வருவதால், நிறைய திட்டங்கள் பாலாகி வருகிறது. கோடநாடு வழக்கு பற்றி சிந்துபாத் கதை போல திமுக பேசி வருகிறது. இது பற்றி நான் முன்பே கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.