“அதிமுக தொண்டனை கூட உன்னால் தொட்டு பார்க்க முடியாது ஸ்டாலின்”- ஈபிஎஸ் அதிரடி
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக ஒன்றிய பேரூர் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிமுக் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பூவை தேடி தேனிக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும், 2026ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அதிமுகவால்தான் தர முடியும். 2021ல் மொத்தமாகவே ரூ.5.18 லட்சம் கோடி கடன்தான் இருந்தது. தமிழகத்தை அதிமுக கடனாளி ஆக்கி விட்டதாக கூறி வல்லுநர்கள் குழுவை அமைத்த திமுக அரசு புதிதாக ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. கொரோனா காலத்தில் 1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு. 40,000 கோடி செலவு இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடுமையான வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம், கலால் வரி, ஜிஎஸ்டி என 56 ஆயிரம் கோடி என பலவகைகளில் அரசுக்கு கூடுதலாக வருவாய் வந்தும் கூட ஏன் 3 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள்?
ஸ்டாலினை போல் நான் பொம்மையாக இருக்க மாட்டேன். அரசுக்கு வரும் வருவாய் முழுமையாக எனக்கு தெரியும். அறிவிப்பது எல்லாம் சாதனையா? இந்தியாவிலேயே ஒரே திட்டத்திற்கு ரூ.67ஆயிரம் கோடி மத்தியில் இருந்து நிதி பெற்றது அதிமுக அரசுதான். அறநிலையத்துறையில் இருந்து வருமானம் வருவதை பார்த்து 10 கல்லூரிகளை உருவாக்கி செலவு செய்து வருகின்றனர். திமுகவினருக்கு விஞ்ஞான மூளை. அறநிலையத்துறை வருமானத்தை கோவில்களுக்குதான் செலவு செய்ய வேண்டும். சாமி பணத்தை கூட விட்டு வைக்கவில்லை. இதனை 2026ல் இந்த சாமி வந்து கேட்பார்.
2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு வருகிறது என்று பாருங்கள்! எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக திமுக கட்சியை சேர்ந்த அமைப்பு செயலாளர் நீதிமன்றத்திற்கு சென்றார். பிறகு அவரே அந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்றார். ஆனால் நான் அந்த வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபித்தேன். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்திற்கு ரூ.230 கோடிக்கு டெண்டர் விட்டுவிட்டு ரூ.410 கோடி செலவு செய்துள்ளார்கள். சிறு வயதில் இருந்து பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றவன் நான். போட்ட வழக்கை திரும்ப பெறுபவன் அல்ல. தலைமை செயலக கட்டிட ஊழல் வழக்கை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு திராணி இருக்கா? திமுக ஊழல் கட்சி. அதிமுக தொண்டனை கூட உன்னால் தொட்டு பார்க்க முடியாது ஸ்டாலின்.அதிமுகவை குறைத்து மதிப்பிட்டுவிட்டு உங்களால் நிம்மதியாக இருந்துவிட முடியாது” என்றார்.