“அமைச்சரவையை பிறகு பார்த்து கொள்ளலாம்... முதல் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்”- சிவி சண்முகம் தரப்பு
அமைச்சரவையில் இடம் பெறுவோம் என காத்திருந்த எஸ் பி வேலுமணி தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த கட்ட நகர்வு குறித்து எம்எல்ஏக்களுடன் ஆரோசனை மேற்கொண்டனர்
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகம் இல்லத்திற்கு வருகை தந்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கமாக, காலை 10 மணிக்கே சிவி சண்முகம் இல்லத்திற்கு வரும் எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், சிவி சண்முகம் ஆகியோர் இன்று 2மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு தான் வருகை தந்தனர். அதற்கு முன்பாகவே எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர்கள் வந்தடைந்தனர். தவெகவில் இன்று முழு அமைச்சரவை பட்டியல் வெளியான நிலையில் கடந்த ஒரு 15 நாட்களாக அமைச்சரவையில் பங்கெடுத்துவிடுவோம் என நினைத்து காத்திருந்தனர் எஸ் பி வேலுமணி, சி வி சண்முகம் தரப்பினர். தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் இபிஎஸ்-யை சந்திக்காமல் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினரையே சந்தித்தார். மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூப்பிதிலும் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என இருந்தனர். ஆனால் இன்று ஏமாற்றமே மிஞ்சியது.
அமைச்சரவையில் இடமும் இல்லாமல், கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டதால் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் தரப்பு, இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அடுத்த கட்ட நிலைபாடு குறித்து ஆலோசித்தனர். அதில் அமைச்சரவை குறித்து பிற்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். தற்போது அதிமுக பொதுக்குழுவை கூட்டி கலந்தாலோசிக்க வேண்டும். அதற்காக ஆதரவாளர்களை திரட்ட வேண்டும். முழு மூச்சாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியும், தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும் இன்று திட்டமிட்டுள்ளனர். அதற்காக பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தினை பெற வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

