தமிழை அழிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது- சிவி சண்முகம்

 
cv shanmugam

தமிழை அழிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, பெயருக்கு திருக்குறளை பேசிவிட்டு தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த வளவனூரில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்க்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், “தமிழை அழிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, பெயருக்கு திருக்குறளை பேசிவிட்டு தமிழை அழிக்க நினைக்கிறார்கள். மத்திய அரசின் அதிகாரம், மொழி வெறியர்களையும் மீறி, மாணவர்கள் உயிரை கொடுத்து தமிழை காப்பாற்றினார்கள். அவர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு இந்தி நாடாக இருந்திருக்கும். மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இன்றைக்கு கடவுளையும் மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் கடவுளையும் மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

தமிழ்நாடு இன்றைக்கு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க காரணம் திராவிடம். தமிழகத்தின் தன்மானத்தை காப்பாற்றியுள்ளது தமிழ் மொழி. திராவிடத்தை அழிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியை அழிக்க வேண்டும். இதனைத்தான் காங்கிரஸ், பாஜக செய்து வருகிறது. தமிழுக்கு எதிராக இருப்பர்வர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும். தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும் அதற்கு அதிமுகவை ஆதரிக்க வேண்டும். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக இதுவரை தமிழ்நாட்டின் உரிமைக்கு என்ன செய்தது? வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய்க்கூட வாங்க முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது. மூன்று லட்சம் காலி இடங்கள் உள்ளது, ஆனால் ஒரு இடம்கூட நிரப்படப்படவில்லை. தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து தமிழ்நாடு காப்பற்றடவேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.