“திருமாவளவன் முதல்வராவது இபிஎஸ்க்கு பிடிக்கவில்லை; இறுதிவரை நான் மட்டுமே முதல்வராக இருக்க வேண்டுமென கூறினார்”- சி.வி.சண்முகம்

 
“திருமாவளவன் முதல்வராவது இபிஎஸ்க்கு பிடிக்கவில்லை; இறுதிவரை நான் மட்டுமே முதல்வராக இருக்க வேண்டுமென கூறினார்”- சி.வி.சண்முகம் 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 47 பேரிடமும் கையெழுத்து பெற்றேன் எனக் கூறும் இபிஎஸ், எப்போது எங்கே கையெழுத்து போட்டார்கள் என்று கூற முடியுமா?  என அதிமுக எம்.எல்.ஏ.சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், “திருமாவளவன் மட்டும் முதல்வர், அமைச்சரவையை அதிமுக எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரை வந்தது.  திருமாவளவனை முதலமைச்சர் ஆக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் நான் தான் முதல்வர் இல்லையென்றால் எதிர்க்கட்சியாக இருப்போம் என்று பழனிசாமி சொல்லிவிட்டார். சட்டமன்ற குழு கூட்டத்தை கூட்டி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், அந்த கூட்டத்தை இபிஎஸ் நடத்தவே இல்லை. தனது பலவீனத்தை மறைக்க தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தான் எம்.எல்.ஏக்களால் தேர்வானதாக இபிஎஸ் கூறுவது பொய். அது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய். அம்மா போல தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என கூறும் தைரியம் ஈபிஎஸ்க்கு உள்ளதா? அம்மா போன்ற ஆளுமை இவருக்கு இருக்கிறதா? அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 47 பேரிடமும் கையெழுத்து பெற்றேன் எனக் கூறும் இபிஎஸ், எப்போது எங்கே கையெழுத்து போட்டார்கள் என்று கூற முடியுமா? சில அதிமுக உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராக கொறடா உத்தரவை மீறி வாக்களித்துள்ளதாக இபிஎஸ் கூறுகிறார். அவர் கூறுவது தவறான கருத்து, பொதுச்செயலாளர் கொறடாவை நேரடியாக நியமிக்க முடியாது. எம்.எல்.ஏக்களால்தான் கொறடாவை தேர்வு செய்ய முடியும்” என்றார்.