“அதிமுக உட்கட்சி விவகாரம் - தேர்தல் ஆணையம் எப்போது முடிவெடுக்கப்படும்?''... ஐகோர்ட் காட்டம்
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகாரவரம்பு குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறி, இந்த ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளது. காலவரம்பை குறிப்பிட்டு 21ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 புகார்கள் வந்துள்ளன அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பு கூறியுள்ளது. உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தேர்தல் ஆணையம், அரசியல் சாசன கடமையை செய்ய தவறுகிறது என்றுதான் அர்த்தம் எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போல் தெரிகிறது என கருத்து தெரிவித்தது.


