தஞ்சாவூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக வருகிற 08ம் தேதி ஆர்ப்பாட்டம்!

 
admk office

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறுவகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடைமாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வரும் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில் வருகிற 08ம் தேதிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி 'ஒரு குடும்ப ஆட்சி' என்று நான் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறேன். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் நலன் சார்ந்தே செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 'முன்னேர் எப்படியோ, பின்னேரும் அப்படியே' என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் பணியாற்றுவதற்காக பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்தவர்கள், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையில், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டு வருவதோடு, பல்வேறு மக்கள் விரோதச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறுவகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடைமாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில், 8.1.2025 - புதன் கிழமை காலை 10 மணியளவில், ரயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. செ. செம்மலை அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் திரு. R. காந்தி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M. சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் திரு. N.S. சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

eps

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக அரசு மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.