கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்- அதிமுக நாளை உண்ணாவிரதம்

 
கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் - அதிமுக நாளை உண்ணாவிரதம்

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க 5 நாட்களாக போராடி வருகிறோம் ஆனால் திட்டமிட்டு தவிர்த்து விட்டார்கள். விதியின்படி அனுமதி என்றார்கள், விதியை பின்பற்றி அனுமதி கேட்டால் நிராகரித்து விடுகிறார்கள். அவையில் கள்ளக்குறிச்சி விவாகரம் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேசக்கூடாது என தவிர்க்கிறார்கள். சட்டசபையில் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான், ஆளும் கட்சிக்கு ஒரு நீதி? எதிர்கட்சிக்கு ஒரு நீதியா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு நீதி வேண்டியும், சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் அதிமுக மனு அளித்துள்ளது.