“திமுக எங்க விரோதி.. அவங்களோட நாங்க ஏன் கூட்டணி வைக்கனும்” - அன்பழகன் காட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “மிகவும் கணத்த இதயத்தோடு நான் உங்கள் முன் நிற்கிறேன், சுயநலமிக்க சில சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் பெரும் மனக்கஷ்டத்தில் உள்ளேன். வேலுமணி, தங்கமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தனது நண்பர்கள்தான். தற்போது நடைபெறும் நிகழ்வுகள் வருத்தமளிக்கிறது. சட்டசபைக்கு பொதுச்செயலாளர் கொடுக்கும் கடிதத்தின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே மரபு. புதுச்சேரி எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்ட இடத்திற்கு சி.வி.சண்முகம் வரவில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்க கையெழுத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவே கையெழுத்து பெறப்பட்டது. திமுக எங்கள் விரோதி.. அவங்களோட நாங்க ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? Election-க்கு முன் மற்றவர்கள்னு கூறிவிட்டு இப்போ அந்த மற்றவர்களுடைய MLAs support மட்டும் வேணுமா
விஜய் ஒரு பலவீனமான முதல்வர். அரசு பதவியில் ஜோதிடரை நியமித்துவிட்டு, பின் பயந்துபோய் அதைத் திரும்பப் பெறுகிறார். தனக்கு நம்பிக்கையானவரைப் பதவியில் வைத்துக்கொள்ளக்கூட அவருக்கு தைரியமில்லை. திமுகவைத் தீயசக்தி என்று கூறிவிட்டு, இப்போது திமுக கூட்டணியில் உள்ளவர்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஆசை வார்த்தைகளைக் கூறி, அதிமுக போன்ற கட்சிகளை உடைக்கப் பார்க்கிறார். இது ஒரு பலவீனமான முதல்வரின் அடையாளம். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையைப் ஏற்றுக்கொண்டு வரட்டும். எஸ்பி வேலுமணி கூறுவதில் தவறில்லை. அவர்கள் ஈ.பி.எஸ்-ஸை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டால், அதுகுறித்து அடுத்த முறை விரிவாகப் பதில் கூறுகிறேன். கொளத்தூரில் திமுக தலைவரை எதிர்த்து நின்ற தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை, கூட்டணியை விட்டு வெளியேற்றும் தைரியம் திமுக தலைவருக்கு இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

