#BREAKING அதிமுக பொதுக்குழு - உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

 
ops

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

op 

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் . அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும்,  ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே  தொடரும் என்றும் உத்தரவிட்டார்.  இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.  இதை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

ops eps

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.  இருப்பினும் அவரது அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.  இதை நீதிபதிகள் சுந்தர் மோகன் மற்றும் துரைசாமி அமர்வு விசாரித்தது.  வழக்கின் விசாரணையின் முடிவில்  கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். இதை தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார்.  எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

supreme court

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்துள்ளார்.