விஜயதசமி நாளில் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்..!!
விஜயதசமி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியில் நன்னாளில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலைத் தொடங்குவது மரபாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், அன்று அரசு விடுமுறை தினமாக இருப்பினும், 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் இணைந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒன்றாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வையும், சேர்க்கை நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் பள்ளிகளில் புதிதாகச் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உடனுக்குடன் எமிஸ் கல்வித் தகவல் மேலாண்மை வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பள்ளிகளில் 2026–2027-ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை முடிந்து அக்டோபர் 5 திங்கட்கிழமை அன்று அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடநூல்களைத் தடையின்றி வழங்க வேண்டும் எனவும், அனைத்து மாணவர்களுக்கும் திருத்தப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை வழங்கி மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குக் கல்வித்துறை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விடுமுறை தினங்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கு மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

