விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

 
vijayabaskar

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  கடந்த 2016 முதல் 21 ஆம் காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  2021 ஆம் ஆண்டு விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 50க்கும்  மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவருக்கு சொந்தமான இடங்களில் 23 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணம், தங்க நகைகள் ,கனரக வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

vijayabaskar

அத்துடன் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரம் வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி புதிதாக வழக்கு பதிவு செய்தனர். இதில் அவர் மனைவி ரம்யா பெயரும் இடம் பெற்றிருந்தது .இது தொடர்பான வழக்கு புதுகோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Vijayabaskar

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு நீதிமன்றம் மூலம் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ஆஜராக வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர், மற்றும் அவரின் மனைவி ரம்யா ஆஜராகிய நிலையில் வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.