“அமைச்சரவையில் இருந்து பொன்முடி நீக்கப்பட வேண்டும் என்பது பெண்களின் கருத்து”- ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் அர்ஜூனா

திமுக தங்களுடைய கொள்கையை நிலை நாட்டுவதில்  கபட நாடகம் ஆடுகிறது என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அடையாறில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “சிறுவயதில் இருந்து என்னுடைய வழிகாட்டியாகவும் கொள்கை ஆசானாகவும் அம்பேத்கர் இருந்து கொண்டிருக்கிறார். தலித் மக்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்னும் குரல் என் உள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதனுடைய பயனாய் தமிழக வெற்றி கழகத்தில் மிகப்பெரிய பயணத்திட்டத்துடன் மிகப்பெரிய கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது, அம்பேத்கரின் கனவை என் தலைவரும் நானும்  நிறைவேற்றுவோம்.

நேர்மையாக இருப்பவர்கள் மீது எப்போதும் விமர்சனம் வைக்கப்படும். அம்பேத்கர் இருக்கும்வரையும் இறந்ததற்குப் பிறகும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.திமுக தங்களுடைய கொள்கையை நிலை நாட்டுவதில் திமுக கபட நாடகம் ஆடுகிறது. மதவாத சக்திகளுடன் அதிமுக கூட்டணி வைத்து வேறு ஒரு அரசியலை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துக்களை உள்வாங்கி பயணித்துக் கொண்டிருக்கிறது தமிழக வெற்றி கழகம் . அமைச்சரவையில் இருந்து பொன்முடி நீக்கப்பட வேண்டும் என்பது பெண்களின் கருத்து, அவரது பேச்சு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சரவையில் இருந்து நீக்காமல் பெயரளவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதை தமிழக வெற்றி கழகம் வலியுறுத்துகிறது” என்றார்.