தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருகை!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்திலும் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. 'வாய்ஸ் ஆஃப் காமன்' நிறுவனர் ஆதவ் அர்ஜுனாவுக்கு த.வெ.க.வில் மாநில அளவில் முக்கிய பதவி தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.