ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடிய ஏடிஜிபி ஜெயராம்..!!
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. அத்துடன் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடைய வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏடிஜிபி ஜெயராமை ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீருடையில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தணியை அடுத்த திருவாலங்காடு டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். 12 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமிழ்நாடு காவல்துறையின் பரிந்துரையை ஏற்று ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தன்னை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


