விஜய் பேசும்போது மின் தடை செய்யப்படவில்லை- ஏடிஜிபி விளக்கம்

 
s

தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம் என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், “கரூர் விஜய் பரப்புரையில் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. விஜய் பேசும்போது மின் தடை செய்யப்படவில்லை. கூட்ட நெரிசல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம். ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது. அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என அவர்களிடம் விளக்கினோம். அவர்கள் கேட்ட உழவர் சந்தையும் மிகவும் குறுகலான இடம். அதனால்தான் அண்மையில் மற்றொரு கட்சி 10 ஆயிரம்- 15 ஆயிரம் பேர் கூட்டி கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தகவல் கொடுத்த பிறகுதான் பரப்புரை நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வந்தன,

கரூரில் கூட்டம் கட்டுங்கடங்காமல் மாறும்போது 50 மீட்டர் முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேசிவிடச் சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி அதை கூறியும் மறுத்துவிட்டனர். மைக் சரியாக கேட்காது. அங்குதான் போய் பேசுவோம் என டிஎஸ்பியிடம் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் உடனடியாக கரூர் வந்தார். எந்த அமைப்பாக இருந்தாலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் போதிய பாதுகாப்பு தர முடியும். விஜய் பிரசாரத்திற்கு மொத்தம் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தவெக கூட்டத்தில் கல் வீச்சு சம்பவம் எதுவும் இல்லை. விதிகளின்படியே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கரூர் ரவுண்டானாவிற்கு விஜய் வரும் போதே 6 மணி ஆகிவிட்டது. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவம் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வந்தது” என விளக்கம் அளித்தார்.