"முந்திரி விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்" - ஜி.கே. வாசன்

 
gk

தமிழக அரசு, மாநிலத்தில் முந்திரி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 

GK Vasan

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகஅரசு, மாநிலத்தில் முந்திரி பயிரிட்டு இழப்பீட்டுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.முந்திரி செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.இந்த ஆண்டு தோட்ட பயிரான முந்திரியை பயிரிட்ட விவசாயிகள் அவர்கள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காத நிலையில் கவலை தெரிவித்துள்ளனர்.

govt

அதாவது முந்திரி பூக்கள் பூக்கும் பருவத்தில் பெய்த பணிப்பொழிவு அதனைத் தொடர்ந்து கடுமையான வெயில் ஆகியவற்றின் தாக்கத்தால் பூக்கள் அனைத்தும் கருகி காய்பிடிக்கவில்லை.அந்த வகையில் விழுப்புரம், அரியலூர், கடலூர், பண்ருட்டி, ஜெயங்கொண்டம். புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட முந்திரி பயிர் மூலம் கிடைக்கக்கூடிய மகசூல் கிடைக்காமல் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

gk vasan

குறிப்பாக முந்திரி நீண்ட நாள் பயிர் என்பதால் வேளாண்துறை அதிகாரிகள் முந்திரி பயிர் சம்பந்தமாக மருந்தோ, ஊட்டச்சத்தோ பரிந்துரைத்திருக்க வேண்டும். மேலும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களைக் பயன்படுத்த வழிகாட்டி முந்திரி பயிர் வளர்ப்புக்கு துணை நின்றிருக்க வேண்டும்.தற்போது முந்திரி பழத்திலிருந்து முந்திரி கொட்டையைப் பறிக்கும் பருவமாகும். ஆனால் இந்த ஆண்டில் முந்திரி காய்பிடிக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முந்திரி பருப்பும், பழமும் கிடைக்காத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு, முந்திரி பயிர் மூலம் கிடைக்கும் மகசூல் கிடைக்க முடியாமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளின் இழப்பீட்டை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.மேலும் தமிழக அரசு, விவசாயிகள் பயிர் செய்யும் போது அவர்களுக்கு ஒவ்வொரு பருவகாலப் பயிர் குறித்து, அந்த பருவகாலம் தொடங்கும் முன்னரே உரிய ஆலோசனை வழங்கியும், சரியான தருணத்தில் பயிர்பாதுகாப்பு மேற்கொண்டும் வேளாண் தொழிலையும், விவாயிகளையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.