காற்றோடு கலந்தார் நடிகை சௌகார் ஜானகி... கண்ணீர் கடலில் மிதந்த உறவினர்கள் மற்றும் திரையுலகம்..!

 
1

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. வயது முதிர்வால் வரும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று (ஆக., 21) காலமானார்.

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் படித்த பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர் சவுகார் ஜானகி. இவரது நிஜப்பெயர் ஜானகி. 1931ல் டிச., 12ம் தேதி பிறந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். 1950ல் தெலுங்கு தயாரிப்பாளர் பிஎன் ரெட்டி தயாரித்து, எல்வி பிரசாத்தின் இயக்கத்தில் வெளியான ‛சவுகார்' படம் தான் இவரது முதல் படமாகும். இந்த படம் வெற்றி படமாக அமைய ஜானகி என்ற இவரது பெயருக்கு முன்னால் சவுகார் என்ற பெயரும் ஒட்டிக் கொள்ள பின்னர் சவுகார் ஜானகி என கொண்டாடப்பட்டார். சினிமாவில் நடிக்க வரும் போதே இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருந்தது. அதன்பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கின. திருமணம், குழந்தை என பார்க்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். 1952ல் டிஆர் சுந்தரம் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'வளையாபதி' என்ற படம் தான் தமிழில் இவரது முதல் படமாக அமைந்தது. தொடர்ந்து ‛‛பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி'' என பல வெற்றி படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி சில ஹிந்தி படங்களிலும் ஏறக்குறைய 400 படங்களில் நடித்துள்ளார். என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ராஜ்குமார், பிரேம் நசீர் என அன்றைய அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்த பெருமைமிக்கவர். 1964ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' திரைப்படம் இவருடைய திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது. அதன்பின் 1969-ல் இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'இரு கோடுகள்' திரைப்படம் இவருடைய நடிப்பாற்றலுக்கு மேலும் மகுடம் சூட்டியது. ‛எதிர்நீச்சல், தில்லு முல்லு' போன்ற திரைப்படங்களின் மூலம் தான் ஒரு நகைச்சுவை நடிகையாகவும் வெற்றி காண முடியும் என்பதை நிரூபித்திருப்பார். கதாநாயகியாக தான் நடிப்பேன் என்றில்லாமல் இரண்டாவது நாயகி, குணச்சித்ரம் ஏன் காமெடி வேடங்களில் கூட நடித்தவர். எந்த மொழிப் படங்களில் நடித்தாலும், அந்தந்த மொழிக்கான உச்சரிப்பை தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிய பெருமைக்குரியவர்

2022ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வென்றார். 1969ல் 'இரு கோடுகள்' திரைப்படத்தற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது வென்றார். 1984ல் பிலிம் பேர் 'வாழ்நாள் சாதனையாளர் விருது'1987, 2007ல் ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றுள்ளார் 2012ல் சைமா 'வாழ்நாள் சாதனையாளர் விருது'

அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.மறைந்த நடிகை சௌகார் ஜானகியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. கண்ணீருடன் வழியனுப்பும் திரையுலகம்!