"இறுதி அஞ்சலியைக் கூட நிம்மதியாக செலுத்த முடியவில்லை"- நடிகர் ராதிகா வேதனை
இயக்குநர் பாக்யராஜ்க்கு ஓர் அதிர்ச்சிகரமான பிரியாவிடை. அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தப்படவேண்டிய இடம் சர்க்கஸ் போல மாறியது. எங்கே, எப்போது நாம் இந்த இரக்கமற்ற தன்மைக்கு மாறினோம்? என நடிகை ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், “50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாக பழகிய நாட்களை நினைவுகூறுகிறோம். அவரது இந்த தீடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் திருமதி.குஷ்பு அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.சமூக வலைதள தாக்கம், உடனுக்குடன் செய்திகளை தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிக பார்வையாளர்களை கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்க தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

