தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம்
மகளிர் ஆணையத்தின் பொறுப்பில் இருந்ததால் என்னால் முழுநேர அரசியலில் ஈடுபட முடியவில்லை என பா.ஜ.க. பிரமுகர் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஏற்றதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை குஷ்பு, “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை. கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன். கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி.
இந்தியாவில் எங்கு பெண்களுக்கு பிரச்சனை இருந்தாலும் அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் என் முழு மனதும் அரசியலில் இருக்கிறது. மகளிர் ஆணையத்தின் பொறுப்பில் இருந்ததால் என்னால் முழுநேர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இருப்பினும் பெண்களுக்குப் பிரச்சனை வந்தால் நான் குரல் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.