“மகன் படிப்பு, குடும்பம், சினிமா வேலை எல்லாமே பாதிப்பு”- கதறும் கஸ்தூரி
இசைவாணி விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நடிகை கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று எழும்பூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நடிகை கஸ்தூர, “கடந்த 4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். இரண்டு படம் இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப்பட்டதோடு மட்டுமல்லாமல் எனது மகனின் கல்வியும் தடைப்பட்டு உள்ளது. எனவே காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன். திங்கட்கிழமை தான் இது விசாரணைக்கு எடுத்து கொள்ளபட உள்ளது.
இந்த நிலையில் சர்ச்சை குறிய வகையில் பேச விரும்பவில்லை. கானா பாடகி இசைவாணி விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலிருந்து தமிழக அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளலாம். தெலுங்கு பேசும் மக்களை விமர்சனம் செய்த கஸ்தூரி என ஊடகங்கள் செய்தி போடுவதை தவிர்க்க வேண்டும். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்து வருகிறார்கள் என செய்தி வெளியிட வேண்டும்” என்றார்.