பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமானுக்கு எதிராக புதிய ஆதாரத்தை கொடுத்த நடிகை

சீமானுக்கு எதிரான வழக்கில் நடிகையிடம் வளசரவாக்கம் போலீசார் நேற்று 7 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீசார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் வளசரவாக்கம் மகளிர் போலீசார் மீண்டும் வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர். அதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர். நாளை காலை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் இருக்கும் நடிகையை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலிசார் கூறியுள்ளனர்.
உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை என நடிகை விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் வசித்து வரும் நடிகையிடம் வளசரவாக்கம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசாரிடம் புதிய ஆதாரங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகையிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையாக வைத்து நாளை சீமான் விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.