எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி காலமானார்!

 
ttn

எழுத்தாளரும், நடிகருமான கே.கே.எஸ்.மணி மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

ttn

நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் பிறந்தவர் கே கே எஸ் மணி. நாடகங்களில் நடித்து வந்த இவர்  பிறகு திரைப்படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். பாரதி வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது  தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதால் இவர் பாரதிமணி என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் அழைக்கப்பெற்றார். ஆட்டோகிராப் ,பாபா ,அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர்  பாட்டையா என அன்போடு அழைக்கப் பெற்றார்.

ttn

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த கே.கே.எஸ்.மணி  வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். பாரதி மணியின் மறைவுக்கு மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாட்டையா' எனப் பாசமுடன் அழைக்கப் படும் பாரதிமணி அய்யா மறைந்து விட்டார்.  எத்தனை அற்புதமான மனிதர்! என்னைப் போல எத்தனையோ மனங்களில் தனித்ததொரு இடம் பிடித்து இரட்டணக்காலிட்டு அமர்ந்தவர்.நாடெங்கும் சுற்றி வந்தாலும் நான் குமரியின் பார்வதிபுரத்து விதைதான் என்று தன் ஊரையும் தோளில் தூக்கிச் சுமந்தவர்.  மகனாய், தம்பியாய், கணவனாய், மருமகனாய், தகப்பனாய், தாத்தாவாய், நாடக நடிகனாய்,  திரைப்படங்களிலும் பல வேடங்கள் தரித்தவர்.  ஓர் எழுத்தாளராகவும்,தன் அனுபவங்களை, "புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" என்று தீட்டியவர். எளிமைதான் இவரது பலம். எளிய மனிதர்களுடனான இவரது பிணைப்பும், மிகப் பெரிய அந்தஸ்த்துக்காரர்களைத் தாமரை இலைத் தண்ணீரெனக் கடத்தலுமே இவரது அறம். வாழ்வையே கலையாகச் சுவைத்தலே இவரது ஆன்ம ரஸம். வரோடு அதிகம் பழகச் சந்தர்பங்களில்லை எனக்கு - ஆனால், ஆர்வமும், அன்பும், அக்கறையும் துலங்க என்னை அணைக்கின்ற அந்த ஒரு அணைப்பில் உண்மையான வாஞ்சையும் ஆதுரமும் புலப்படும். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் வாழ்வின் மீதான நம்பிக்கையைத் திரி தூண்டிவிடும் அற்புத நிமிடங்கள்.வெடித்துச் சிரிக்கும் அவர் பேச்சும் குரலும் இன்றில்லை -அநேக சந்தர்ப்பங்களில் அவர் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் "I am a blessed soul!" என்ற சொற்றொடரை மனதில் கொள்கிறேன். அவரை நான் எப்போதும் 'Lovable Rascal ' என உரிமையுடன் அழைப்பதை மிக ரசித்துச் சிரிப்பார்.வயது, பால் பேதமற்ற, எண்ணி முடியாத அவரது நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், அய்யாவின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்." என்று குறிப்பிட்டுள்ளார்.