நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை- நடிகர் விஷால்

அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆகும் பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை என கடலூரில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவட்ட தலைமை ரசிகர் மன்ற நிர்வாகியின் இல்ல சுப நிகழ்வில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற மக்களுடன் புகைப்படங்களையும் செல்பியையும் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “பல படங்களில் இரண்டாம் பாகம் தோல்வி அடைகிறது. மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு படங்கள் இருந்தால் அது நிச்சயம் வெற்றி அடையும். எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி இரட்டை வரி வசூலிக்கப்படுகிறது? ஏன் யாருமே இந்த விவரகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் உள்ளனர்? இந்த இரட்டை வரி முறையினால் திரையுலகம் மிகவும் மோசமாக பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.
தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கதாக உள்ளது. அரசியல்வாதிகள் நடிகர்களாகும் பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை. நடிகர் விஜய் கட்சிதான் துவங்கியுள்ளார், அரசியலை துவங்கட்டும். நான் அவருடன் இணைவது அப்பாற்பட்டது” என தெரிவித்தார்