திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் மேலாளர் பி.டி.செல்வக்குமார் பரபரப்புப் பேட்டி..!
நடிகர் விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி.செல்வக்குமார், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி.செல்வக்குமார், தனது இந்த அரசியல் மாற்றம் குறித்து பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்தார்.
தனது இந்தப் பயண மாற்றம் குறித்து பேசிய அவர், "விஜய் ஒரு நடிகராக சிறப்பாகப் பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) விஜய்யின் தந்தையையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல், விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை. நான் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஒரு தூணாகச் செயல்பட்டேன். ஆனால், விஜய்யின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. த.வெ.க.வில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பே தன்னை ஈர்த்ததாகவும், அதனால் தான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பி.டி.செல்வக்குமார், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து கடுமையான கருத்துகளை முன்வைத்தார். "நிலவு ஒரு நாள் அமாவாசையாகும். நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும். அதுபோல அவரும் ஒரு நாள்... எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று விஜய் கூறினார். ஆனால், நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் போன்றவர்கள் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "மக்களையும் ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா எனத் தெரியவில்லை. விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும், ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்கக் கூடாது" என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டு, தான் தன் உயிர் உள்ளவரை மக்களுக்குச் சேவை செய்வேன் என்று உறுதியளித்தார்.


