'முதல்வரின் பயோபிக்கில் உதயநிதி நடிக்கணும்'- நடிகர் வடிவேலு

 
வடிவேலு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். 

Image

ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை மேயராக, துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் பதவி வகித்த போது செய்த திட்டங்கள், கட்சிப் பணிகள், கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான படங்களும் அவர் பேசிய வாசகங்களும் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன. மிசா கைதியாக சிறை வாழ்க்கை குறித்த அரங்கு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த கண்காட்சியை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சிறையில் அனுபவித்த இன்னல்களை தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது. முதலமைச்சரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை அனைத்து தரப்பு மக்களும் வந்து பார்வையிட வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம்” என்றார்.