“விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் முன்னேறுங்கள்”- சிவகார்த்திகேயன்
சென்னை போரூர் அருகே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடினார் நடிகர் சிவகார்த்திகேயன். இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படமான 'சேயோன்' குறித்த முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “சேயோன் படத்தின் 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 40% படப்பிடிப்பு பணிகள் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் முழுமையான அதிரடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது. சினிமா பின்புலம் இல்லாமல் விஜய் சேதுபதியும் நானும் நடிகர்களாக வந்திருக்கிறோம். மிமிக்ரி செய்பவராலும் நடிகராக முடியும் என்பதை நிரூபித்திருக்கிறேன். என்னை ‘Self-made Star’ என்று அழைக்காதீர்கள். உங்கள் அன்பால் உருவான ‘People-made Star’ நான்.
மிமிக்ரி கலைஞர், ஆங்கர் சினிமாவில் வெற்றி பெற முடியாது என்றார்கள். ஆனால் நடிகராக வெற்றி பெற்றுள்ளேன். விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். கண்டுகொள்ளாமல் முன்னேறுங்கள். தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். அதிகம் படிக்கப் படிக்க நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களில் இருந்து விலகவும் அது உதவும். நன்றாகப் படித்து, நன்றாகச் சம்பாதியுங்கள். குடும்பம் தான் முதலில் முக்கியம்” என்றார்.

