வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத நடிகர் ரவி..! நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்!
‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவிக்கு, அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து, அவரது பெயர் ஜெயம் ரவி என்று மாற்றப்பட்டது.
எம்.குமரன் s/o மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த அவருக்கு, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதற்கிடையே, சினிமாவின் முக்கிய அடையாளம் கொடுத்த ஜெயம் என்ற அடையாள பெயரை வைத்து இனி தன்னை அழைக்க வேண்டாம் எனவும், ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கவும் என்ற அதிரடி அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இதற்கிடையே, தனியார் வங்கியில் கடன் பெற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டை வாங்கி இருந்தார். அந்த வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்த ரவி மோகன், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ரவி மோகன் வீட்டிற்காக வாங்கிய கடனின் இஎம்ஐ (EMI) தொகையை கடந்த 10 மாதங்களாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.7 கோடியே 64 லட்சம் வரை இஎம்ஐ செலுத்தவில்லை என வங்கி தரப்பில் ரவி மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பிய போதும் முறையான பதில் இல்லை எனத் தெரிகிறது.
இதனால், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் வீடு மற்றும் தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ரவி மோகன் ஸ்டூடியோவிலும் வங்கி சார்பில் கடனை செலுத்துவதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், கடனை கட்ட தவறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

