நடிகர் ரன்தீப் ஹூடா கேள்வி ? வீர சாவர்க்கரின் தியாகங்கள் ஏன் மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை..?

 
1

வீர சாவர்க்கரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், மும்பையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகரான ரந்தீப் ஹூடா, சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “ஸ்வதந்த்ரியவீர் சாவர்க்கர்’ படத்தை சிறப்பாக இயக்கியதற்காக விருதைப் பெற்றார்.

விருது வழங்கும் விழாவின் போது, ரன்தீப் ஹூடா உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தினார், சாவர்க்கர் மீதான தனது ஆழ்ந்த மரியாதையையும் போற்றுதலையும் வெளிப்படுத்தினார். சாவர்க்கரைப் பற்றி திரைப்படம் எடுப்பதை முதலில் நினைத்தபோது , அந்த புரட்சியாளரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றி தனக்கு அதிகம் தெரியாது. பின்னர் அவரை பற்றிய நிறைய புத்தகங்களை படித்து சாவர்க்கரின் மகத்தான தியாகத்தையும் நெகிழ்ச்சியையும் உணர்ந்தார். இந்த புரிதல் தான் தன்னுடைய உடல் எடையை குறைக்கவும், கதாபாத்திரத்தை உண்மையாக சித்தரிக்க உடல் மாற்றத்தை ஏற்படுத்தவும் தூண்டியது என்று அவர் கூறினார்.

சாவர்க்கரின் கதையை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோபம் மற்றும் ஆசை இருந்தது. இதிலிருந்துதான் சாவர்க்கர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான ஊக்கம் கிடைத்தது என்று கூறினார். சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்கள் ஏன் மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் பாராட்டப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். வீர சாவர்க்கரின் சித்தாந்தம் மற்றும் பங்களிப்புகளை சினிமா மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இப்படத்தில் நடித்ததாக கூறினார்.

இந்நிலையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சீர்திருத்தவாதியுமான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு, அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைக்கு நடிகர் ரன்தீப் ஹூடா சென்று மரியாதை செலுத்தினார்.

தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், வீர சாவர்க்கரின் வாழ்க்கையை புத்தகத்தில் படித்து திரையில் காண்பிக்கும் போதே அதில் எனக்கு ஈடுபாடு அதிகமாகி விட்டது. வீர சாவர்க்கரின் சாராம்சத்தை புரிந்து கொண்டவர்கள்,அந்த கதையை மிக சிறப்பாகவும், சக்தி வாய்ந்ததாகவும் சித்தரித்துள்ளதற்கு என்னை பாராட்டினர்.இது மிகவும் நன்றாக இருக்கிறது. இன்று விநாயக் ஜிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செல்லுலார் சிறைச்சாலைக்கு வந்துள்ளோம். வலிமையான புரட்சியாளர்கள் அனைவரையும் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு தனிமைப்படுத்தினர். அதுதான் இந்த இடம். இவ்வாறு பேசினார்.