ஜெயலலிதாவுக்கு எதிராக தான் கருத்து தெரிவித்தது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

 
rajini

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக தான் கருத்து தெரிவித்தது ஏன் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முன்னாள் அமைச்சரும், தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது தான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவிததது ஏன் எனவும் விளக்கமாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் 100 நாள் விழா நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் தயாரிப்பாளராக ஆர்எம் வீரப்பன் பங்கேற்றிருந்தார். அப்போது அதிமுக அமைச்சராகவும் அவர் இருந்தார். திரைப்பட விழாவில் நான் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசி இருந்தேன். அப்போது எனக்கு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. எதோ மனதில் பட்டதை பேசினேன். நான் பேசிய நிகழ்ச்சியில் ஆர்.எம்.வீரப்பன் பங்கேற்றதற்காக அம்மையார் ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினார். இதைக் கேட்டதும் நான் ஆடி போய்விட்டேன். எனக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அவருக்கு போன் பண்ணினேன் யாரும் எடுக்கவில்லை. 

காலையில் போன் செய்து ஆர்.எம்.வீரப்பன் சாரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் ஒன்றுமே நடக்காதது போல பேசினார். இதையெல்லாம் நீங்கல் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள் சந்தோஷமாக இருங்கள் என கூறினார். இதுதொடர்பாக நான் ஜெயலலிதாவிடம் பேசவா என கேட்டேன். ஆனால் அவர் நீங்கள் பேசி உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த அம்மா அதையெல்லாம் கேட்க மாட்டார்கள் என கூறினார். ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் தான் முக்கிய காரணம். ஆர்.எம்.வீரப்பன் சார் ரியல் கிங் மேக்கர்  என கூறினார்.