அரசியலில் இருந்து விலக காரணம் என்ன? - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

 
rajini

அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து தான் பின்வாங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனிடையே இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் முன்னதாக அறிவித்தார். இதனிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில்,  உடல்நிலையை காரணம் காட்டி அவர் தான் இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது அவரது தொண்டர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில்,  அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து தான் பின்வாங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து கூறியதாவது: நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. நான் அந்தச் சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார்.  தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்றால் முதலில் என் முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இயலாத காரியம். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன். அப்போது என்னுடைய மருத்துவர், 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன்' என்று கூறி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தேன். இவ்வாறு கூறினார்.