நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி! திருப்பதியில் நடிகர் பிரபு பேட்டி

 
திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்

மருத்துவமனையில் இருந்த போது என்னை நேரிலும் போனிலும் நலம் விசாரித்து, எனது நலம் வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி நடிகர் பிரபு தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்து பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே நடிகர் பிரபு மற்றும் அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு ஆகியோருடன் கோயில் முன்பு இருந்த ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் நிதானமாக நடந்து கொண்டே  பிரபு செல்ஃபி வழங்கினார். 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகர் பிரபு, “தொற்று காரணமாக ஐந்து நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது. மருத்துவமனையில் இருந்தபோது நேரிலும் போனிலும் நலம் விசாரித்து மற்றும் என்னை சந்திக்க முடியாவிட்டாலும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  உடல்நலம் சீராக இருப்பதால் ஏழுமலையானுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அடுத்த வாரம் முதல் மீண்டும் பழையபடி சினிமா படப்பிடிப்பிற்கு செல்வேம்” என்றார்.