"இந்தியா கூட்டணி நாட்டுக்கு தேவை! திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்"- கமல்ஹாசன்

 
கமல்

தற்போது எனக்கு தேர்தல் வேலைகள் இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு தான் நானும் ரஜினியும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் பணிகள் தொடங்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் நடிகரும் மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நிச்சயமாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநில முழுவதும் பிரச்சாரம் செய்வேன். அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட தான் இப்போது சென்று கொண்டிருக்கிறேன். பிரச்சாரம் தொடர்பாக கூடிய விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பேன். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும் இன்று செல்கிறேன். இந்தியா கூட்டணி எதற்கு என்று கேட்டு நிறைய பேர் சிரித்தார்கள். இப்போது இந்த கூட்டணி நாட்டுக்கு தேவை, அந்த காரணத்திற்காக தான் நானும் இந்த கூட்டணியில் இருக்கிறேன்.


தற்போது எனக்கு தேர்தல் வேலைகள் இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு தான் நானும் ரஜினியும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் பணிகள் தொடங்கும். தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பதை நான் ஏன் பார்க்க வேண்டும் எனக்கு தேர்தல் பணி அதிகம் உள்ளது. மக்கள் நீதி மைய்யம் கட்சியில் எப்போதும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, அந்தக் கட்சியில் நான் தான் இருப்பதிலேயே பழைய ஆள்” என்றார்.