திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை பெற்று மோசடி- நடிகர் காதல் சுகுமார் மீது துணை புகார்

 
ச்

நடிகர் காதல் சுகுமார் மீது வடபழனி போலீசார் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருமாண்டி, காதல், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் காதல் சுகுமார். இவர் மீது துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் “எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. ஆனால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இந்த சூழலில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் காதல் சுகுமாரன் என்னுடன் பழகி வந்தார். அது காதலாக பின்பு மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதை வைத்தே என்னிடம் நகை, பணம் வாங்கியுள்ளார். ஆனால் இப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்க்கிறார்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து வடபழனி போலீசார் காதல் சுகுமாரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த துணை நடிகை இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நடிகை, “2022-ஆம் ஆண்டில் அப்போது சினிமா நடிகரான சுகுமார் என்கிற காதல் சுகுமார் எனக்கு பழக்கமானார். நான் என் கணவருடன் சேர்ந்து வாழாமல் தனியே வாழ்ந்து வருவதை அறிந்துக்கொண்ட சுகுமார் என்கிற காதல் சுகுமார் அவர்கள் தனக்கும் திருமணமாகி விவாகரத்து பெற்று மனைவி பிள்ளைகளை விட்டு தனியாக வாழ்ந்து வருவதாகவும் இதனால் என்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறி ஏமாற்றி விட்டார். என்னுடைய பாதுகாப்பு கருதியும், பிள்ளைகளின் எதிர்காலம் நலன்கருதியும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு அவர் எனக்கு கொஞ்சம் கடன் பிரச்னைகள் இருப்பதால் அதனை அடைத்து விட்டு முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுகுமார் ஏமாற்றி விட்டார். 

நெல்லூர் கஸ்மூர் தர்காவில் உனது முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதற்கு உடன்பட்டு நானும் தர்கா முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்பு பலநாட்கள் அவர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் அவருடைய செலவினங்களையும் நான்தான் கவனித்துக்கொண்டு செலவு செய்து வந்தேன். தனக்கு கடன் கொடுத்தவர்கள் மிகவும் பிரச்சனைகள் செய்வதால் அவர்களுடைய கடனை அடைத்துவிட்டு தான் நடிகர் சந்தானத்தை கதாநாயகனாக வைத்து நடைபெறும் சூட்டிங் ஆரம்பித்ததும் கடன் பணத்தை திருப்பி கொடுக்கிறேன் என்று கூறினார். அவருக்கு ரூ.3 லட்சம் - ரூ.1.5 லட்சம் ரூ.1 லட்சம் ரூ.50 ஆயிரம் என ரூ. 7 லட்சம் வரை என்னிடம் பணம் பெற்றுள்ளார். இதற்கான ஆதாரங்கள் - வாட்ஸ்-அப் மெசேஜ்கள் போலீசிடம் கொடுத்துள்ளேன். 

இந்நிலையில் நான் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் அவருடைய செல்போனை எடுத்து பார்த்தேன். அதில் அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது. இதில் பல பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத உறவிலும் இருந்து இருக்கிறார். இதை கண்டு நான் அதிர்ந்துபோன நிலையில் மேலும் அவர் என்னிடம் சினிமா சூட்டிற்கிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிங் செல்லாமல் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள அவருடைய முதல் மனைவி வீட்டிற்கு சென்று மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருவதாக தெரியவந்து இதனை கண்டு மிகவும் அதிர்ந்து போனேன். காதல் சுகுமார் மீது சட்டநடவடிக்கை எடுக்கும்படி 31-12-2024 அன்று வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். விசாரணையில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என வேதனையோடு தெரிவித்தார்.