நடிகர் கஞ்சா கருப்பு வீட்டில் துயரம்..! அடையாளம் தெரியாத வாகனம் மோதி தம்பி உயிரிழப்பு!
மதுரையில் இருந்து நடிக்க வந்தவர் தான் கஞ்சா கறுப்பு.இவர் நிஜ பெயர் கறுப்பு ராஜா.பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் நடித்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக அவர் நடிக்க அதுவே அவருக்கான பட்டப்பெயராக அமைந்துவிட்டது.சுப்பிரமணியபுரம் படத்தில் கஞ்சா கறுப்பு நடித்திருந்த வேடத்தை இன்றுவரை தமிழக மக்களால் மறக்கவே முடியாது.இதற்கு பிறகு, ராம், சிவகாசி, சண்டக்கோழி, தெனாவட்டு, நாடோடிகள் என ஏராளமான படங்களில் நடித்தார்.. இதனால் குறுகிய காலத்திலேயே 100 படங்களுக்கு மேல் கஞ்சா கருப்பு நடித்ததுடன், சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டினார். தன் திரையுலக வாழ்க்கைக்கு அடிபோட்ட, பாலா-அமீர் என்று 2 டைரக்டர்களின் பெயரைதான் தன்னுடைய பங்களாவுக்கும் வைத்தார்.
இப்படி தொடர்ந்து படங்கள் நடிக்க 2013ம் ஆண்டு கஞ்சா கறுப்பு வேல்முருகன் போஸ்வெல் என்ற படத்தை தயாரித்தார், இப்படம் வந்தது கூட யாருக்கும் தெரியவில்லை. இப்படத்தால் சொந்த வீட்டை விற்று இப்போது சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒரே படத்தில் கடனாளி ஆகிவிட்டார் கஞ்சா கருப்பு.
இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி அறிவழகன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் உயிரிழந்துள்ளார்.
இதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அறிவழகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தம்பி உயிரிழந்ததை தாங்க முடியாத கஞ்சா கருப்பு, இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கும் கோரிக்கை விடுத்துள்ளார். உருக்கமாக பேசிய கஞ்சா கருப்பு, "அதிகாலை 3 மணியளவில் டீ குடிக்க வெளியே சென்ற என் தம்பி மீது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதுவரை அந்த வாகனம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்தால் என் அம்மா மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். எந்த நேரத்திலும் உடைந்து போகும் நிலையில் உள்ளார். குறைந்தபட்சம் என் அம்மாவின் மனநிம்மதிக்காகவாவது இந்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.

