நடிகர் சந்திரமோகன் மரணம்- கமல்ஹாசன் இரங்கல்

 
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த ஆசை  - கமல்ஹாசன்..

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் வயது முதிர்வு மற்றும் மாரடைப்பால் காலமான நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய மூத்த நடிகரும், எனது ஆத்ம நண்பருமான சந்திரமோகன் விடைபெற்றுக்கொண்டார்.  அவருக்கும் எனக்குமான பந்தம் தொடங்கியது என் 16வது வயதில்.  சந்திரமோகனுக்கு நடனம் பயிற்றுவிக்கும்படி தங்கப்பன் மாஸ்டர் என்னைப் பணித்தார். சந்திரமோகனின் தமிழில் தெலுங்கு வாடை சற்று தூக்கலாக இருக்குமென்பதால் அவர் கதாநாயகனாக நடித்த படத்திற்கு என்னையே தமிழில் டப்பிங் பேசும்படி பணித்தது ஏவிஎம் நிறுவனம். அதுவரை டான்ஸ் அஸிஸ்டெண்டாக இருந்த எனக்கு அது ஒரு புதிய வாய்ப்பாக அமைந்தது. இப்படித் தொடங்கிய எங்கள் பயணத்தில், தமிழில் பெருவெற்றி பெற்ற 16 வயதினிலே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என் கதாபாத்திரத்தை சந்திரமோகன் ஏற்றார். 

எங்கள் இருவருக்குமான பொதுவான ஆர்வங்களில் முதன்மையானது சாப்பாடு. தேடித்தேடி ரசித்து ரசித்து உண்பதில் மகா சமர்த்தர். அதை விட வாழும் கலை அறிந்த நிபுணர். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூத்திரம் அவருக்குத் தெரியும். அபாரமான நடிகர், எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்த மாணவர், என் இனிய நண்பர் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். இத்தருணத்தில் அவரது நினைவுகள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. சென்று வாருங்கள் என் ஆப்தரே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.