அனாதையாய் நின்ற அபிநய்க்கு கடைசி நிமிடங்கள் வரை கூடவே இருந்த நடிகர் பாலா
உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் அபிநய் உடல் தகனம் செய்யப்பட்டது.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அபிநய் அதனைத் தொடர்ந்து ஜங்ஷன், தாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 44. கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக காத்துக்கொண்டு இருந்த இவருக்கு நடிகர் தனுஷ் மற்றும் பாலா உள்ளிட்டவர்கள் பண உதவி செய்திருந்தனர். சமீபத்தில் தான் நடித்த ஒரு படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அபிநய் கலந்து கொண்டார். விஜயின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

20 கிலோ வரை எடை குறைந்து பரிதாபமான நிலையில் காணப்பட்ட அபிநய், பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என யாரும் இல்லாமல் நண்பர்கள் வீடு, ஹோட்டல் என மாறி மாறி தங்கி வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அபிநய் காலமானார். சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இவரது இறுதி சடங்குகளை எடுத்து நடத்த யாருமில்லாததால் நடிகர் சங்கமே நடிகர் பாலாவும் ஏற்று நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் வடபழனி ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

