நடிகர் அல்லு அர்ஜூன் நிம்மதி...கிடைத்தது ஜாமின்!
புஷ்பா 2 திரைப்படத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழக்கமான ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழக்கமான ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு வழக்கமான ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் நம்பள்ளி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.