முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்..!
தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' (Motor Sports City) அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) அறிவித்துள்ளார்.
அதாவது, தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களின் முக்கிய மையமாக மாற்றுவதே இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும்.
அதன்படி, ஃபார்முலா 1 (Formula 1), F2, F3 மற்றும் F4 போன்ற சர்வதேச அளவிலான உயர்தர கார் பந்தயங்களை நடத்தும் வசதிகளுடன் கூடிய அதிநவீன பந்தய வளாகம் உருவாக்கப்படும்.
அதேபோல, இளையோரின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உயர்தர பயிற்சிகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சாம்பியன்களை உருவாக்குவதற்கான பிரத்யேக பயிற்சி வசதிகளும் இதில் இடம்பெறும்.
இதன் மூலம் விளையாட்டு மற்றும் சுற்றுலாவில் தமிழகம் முன்னேறுவதுடன், ஆட்டோமொபைல் துறையிலும் கூடுதல் வளர்ச்சியை எட்டும் என கார் பந்தய ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு,
தமிழ்நாட்டில் அமைய இருக்கும் 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' முன்னெடுப்பிற்கு வாழ்த்துக்கள். தமிழக இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்த்து, அவர்களின் திறமையை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியவை.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அமைய இருக்கும் 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' என்கிற அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது நான் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தைகளை சற்றே இங்கு மாற்றி கூற விரும்புகிறேன்.
'One small step by the Tamilnadu Government, one giant leap for Indian Motor Sports' (தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல் )
தமிழக முதல்வர் மாண்புமிகு சி ஜோசப் விஜய்யின் முயற்சிகள் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மோட்டார் ஸ்போர்ட் சிட்டி உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும்" என தனது அறிக்கையில் அஜித்குமார் தெரிவித்துள்ளார் .

