போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை..!! அதிமுகவின் வசைப்பாடுகளுக்கு நாங்கள் கவலைப்படுவதில்லை - அமைச்சர் சேகர் பாபு..
நாங்கள் பணி செய்து பெயர் வாங்குபவர்கள்; அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. இவை அனைத்தும் மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்த புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்திருக்கிறது.
பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்குவது வழக்கம். காரணம் இது பள்ளமான, தாழ்வான பகுதி, இங்கு தேங்கக்கூடிய தண்ணீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று முதல்வர் நேற்று இந்தப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை துரிதமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை, பால் தேவை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசும், திமுகவும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை. இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே, குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எங்களது தரப்பில் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதற்கு செவிசாய்த்து, அந்த குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.


