கோவை சிறுமி வழக்கில் அதிரடி! லேடி இன்ஸ்பெக்டரை வெட்டிட்டு ஓடப் பார்த்த கொடூரன்... காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு!

 
gun

கோவை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நேற்று (செப். 12) புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காஞ்சிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளைப் பறிமுதல் செய்வதற்காக, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீஸ் குழுவினர் இன்று மாலை தவசியை ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, ஆய்வாளர் சுவர்ணவள்ளியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். அங்கிருந்து அவர் தப்பியோட முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் அவரைத் தடுக்க முயன்றனர். அப்போது, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் தவசியின் இடது காலில் குண்டு பாய்ந்தது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைதான சந்தோஷ், தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மாநகரக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.