அரசு அதிகாரிகளின் கணக்கு விவர அறிக்கை இணையத்தில் பதிவேற்றம்..

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக துணை மாநில கணக்காயர் கார்த்தி குமார் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சேமநல நிதி எனப்படும் பி.எஃப் மற்றும் ஆண்டு கணக்கு விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என தமிழக துணை கணக்காயர் அறிவித்திருக்கிறார். அதன்படி கடந்த 2015 - 16ம் நிதியாண்டு முதல் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், பி.எப்., கணக்கு விவரங்கள் மாநில கணக்காயரின் www.agae.tn.nic.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 2022-23ம் ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணை மாநில கணக்காயர் கார்த்தி குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு பணிநிலை சார்ந்த அனைத்து அதிகாரிகள், ஊழியர்களின் 2022-23ம் ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை, தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது! அதிகாரிகள், சந்தாதாரர்கள் தங்களின் கணக்கு விவர அறிக்கையை, http://cag.gov.in/ae/tamil-nadu/en என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!” என்று தெரிவித்துள்ளார்.