ஸ்கேன் எடுக்க சென்றவருக்கு ஊசி போட்டதால் விபரீதம்- பறிபோன உயிர்
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவருக்கு பாக்கியவதி என்கிற மனைவியும் திவ்யபாரதி ஸ்ரீதேவி என்கிற மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு கால் நரம்பு சுருட்டல் காரணமாக காயம் இருந்துள்ளது. இதற்காக டாக்டர்கள் பரிந்துரையின்படி திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க இன்று மகளுடன் வந்துள்ளார். அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் டாக்டரை அவருக்கு டெஸ்ட் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனுக்கு வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டவரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையறிந்த ரவிசந்திரன் உறவினர்கள் ஸ்கேன் சென்டரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து துர்க்காலயா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். இந்த சம்பவம் குறித்து நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறியல் போராட்டம் காரணமாக இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

